மளிகை கடைக்காரருக்கு கத்திக்குத்து; 2 வாலிபர்கள் கைது

மளிகை கடைக்காரர் கத்திக்குத்தில் காயம் அடைந்தார்.

Update: 2022-03-13 12:14 GMT
சென்னை புரசைவாக்கம் சுந்தரம் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 28). இவர் தனது வீட்டின் முன்பு மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் 3 இளைஞர்கள் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தனர். திடீரென பாலகிருஷ்ணனுடன் தகராறில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் பாலகிருஷ்ணனை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். இதில் அவர் காயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சில நாட்களுக்கு முன்பு தனது கடை அருகே புகைப்பிடித்து கொண்டிருந்த இளைஞர்களை பாலகிருஷ்ணன் கண்டித்ததும், இதற்காக பழிவாங்கும் வகையில் அந்த இளைஞர்கள் அவரை கத்தியால் குத்தியதும் தெரியவந்தது.

இந்தநிலையில் பாலகிருஷ்ணனை கத்தியால் குத்திய ஓட்டேரியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (20), புரசைவாக்கத்தை சேர்ந்த நிர்மல்குமார் (20) ஆகிய 2 பேரை வேப்பேரி போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்