திருவொற்றியூரில் உள்ள தேரடி, விம்கோ நகரில் இன்று முதல் மெட்ரோ ரெயில்கள் நின்று செல்லும்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம், கட்டம் 1-ன் நீட்டிப்பு திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை (9 கி.மீ.) பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலையங்களின் அனைத்து பணிகளும் முடிவுற்றது மற்றும் மெட்ரோ ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்ததின் பேரில், அவ்விரு மெட்ரோ ரெயில் நிலையங்கள் 13-3-2022 (இன்று) முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது என்றும், இவ்விரு மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் மெட்ரோ ரெயில்கள் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இம்மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம். சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இம்மாதம் 11-ந்தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 2 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு இது ஒரு மைல் கல்லாகவே இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.