வாகனம் மோதி சுங்கச்சாவடி ஊழியர் சாவு

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுங்கச்சாவடி ஊழியர் பலியானார்.

Update: 2022-03-13 11:42 GMT
சுங்கச்சாவடி ஊழியர் பலி

சென்னையை அடுத்த புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 28). இவர், புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். புழல் மேம்பாலம் அருகே சென்றபோது, அவரது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

சென்னை போரூர் ராமசாமி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (22). செண்டை மேளம் வாசிக்கும் கலைஞர். இவர் நேற்று முன்தினம் மாலை ராயபுரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவொற்றியூரில் இருந்து காசிமேடு சூரியநாராயண சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராமல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் காசிமேடு சிங்காரவேலன் நகர் பள்ளம் பகுதியைச் சேர்ந்த மீனவர் மன்னார் (55) என்பவர் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த அவரது அண்ணன் ஏழுமலை (60) ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சங்கரும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காசிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்