தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிக்கூடங்களில் செயல்பட்டு வந்த மழலையர் வகுப்புகளின் நிலை என்ன?; வாய்மொழி உத்தரவால் மூடப்பட்டன
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிக்கூடங்களில் செயல்பட்டு வந்த மழலையர் வகுப்புகள் வாய்மொழி உத்தரவின்பேரில் நிறுத்தப்பட்டதாக வரும் தகவல்களால் மழலையர் வகுப்புகளின் எதிர்கால நிலை என்ன என்ற கேள்வி எழுந்து உள்ளது.
ஈரோடு
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிக்கூடங்களில் செயல்பட்டு வந்த மழலையர் வகுப்புகள் வாய்மொழி உத்தரவின்பேரில் நிறுத்தப்பட்டதாக வரும் தகவல்களால் மழலையர் வகுப்புகளின் எதிர்கால நிலை என்ன என்ற கேள்வி எழுந்து உள்ளது.
மழலையர் வகுப்புகள்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களின் தரத்தை உயர்த்தும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சிகளை எடுத்தது. அதில் ஒன்று அரசு பள்ளிக்கூடங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்குவதாகும். இதன் மூலம் ஏழை-எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்விக்காக தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்த்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதை தடுக்கவும், ஏழை குழந்தைகளுக்கும் இலவசமாக ஆங்கில வழிக்கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த திட்டம் நேரடியாக பள்ளிக்கல்வித்துறை மூலம் தொடங்கப்படாமல், அங்கன்வாடிகள் மூலம் செயல்படுத்தப்பட்டது. அதாவது அரசு பள்ளிக்கூடங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்பட்டன. அதாவது எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இந்த அங்கன்வாடி மையங்களில் நடத்தப்பட்டன.
ஆசிரியைகள் நியமனம்
இந்த வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கான இலவச பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் மூலம் வழங்கப்பட்டன. அதாவது மதிய உணவு, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம் அங்கன்வாடிகளுக்கு வழங்கப்பட்ட முறையிலும், கல்வியை பள்ளிக்கல்வித்துறையும் வழங்கின.
இதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியைகள் கட்டாய பணியிட மாற்றம் செய்யப்பட்டு அங்கன்வாடிகளில் நியமிக்கப்பட்டனர்.
கலந்தாய்வு கூட்டம்
ஆசிரியைகளும் அந்த பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தனர். இதனால், அரசு பள்ளிக்கூடங்களில் செயல்பட்டு வந்த மழலையர் வகுப்புகளுக்கு ஏராளமான பெற்றோர்கள் மனம் உவந்து தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து சேர்த்தனர்.
கடந்த கொரோனா விடுமுறை காலங்களிலும் ஆசிரியைகள் வாட்ஸ்அப் மூலம் குழந்தைகளுக்கு பாடங்கள் நடத்தி வந்தனர். வழக்கம்போல மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடந்தது. ஆனால், கடந்த மாதம் மழலையர் பள்ளிக்கூடங்களில் நியமிக்கப்பட்டு இருந்த ஆசிரியைகள் மீண்டும் தொடக்கப்பள்ளிக்கூடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதே நேரம் மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியைகள் புதிதாக நியமிக்கப்படவில்லை.
வாய்மொழி உத்தரவு
அரசு பள்ளிக்கூடங்களில் செயல்பட்டு வந்த மழலையர் வகுப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உயர் அதிகாரிகளிடம் இருந்து வாய்மொழி உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு பின்னர் மழலையர் வகுப்புகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தனியார் பள்ளிக்கூடங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது.
ஈரோட்டில் உள்ள சில பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சுழற்சி முறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியைகளே எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளையும் கவனித்து வருகிறார்கள். தொடர்ந்து ஆசிரியைகள் நியமிக்கப்படவில்லை என்றால் மழலையர் வகுப்புகள் அரசு பள்ளிக்கூடங்களில் இல்லாத நிலை ஏற்படும்.
முடக்கம்
இதுபற்றி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:-
அரசு பள்ளிக்கூடங்களில் மழலையர் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டபோது, அந்த பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் தங்கள் சொந்த நிதி, அன்பளிப்பு உள்ளிட்டவற்றை பெற்று, குழந்தைகளுக்கான வகுப்பறைகளை புதுப்பித்தனர்.
அதுமட்டுமின்றி, அரசு பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கைக்கு மழலையர் வகுப்புகள் ஒரு நுழைவு வாயிலாக இருக்கும் என்பதால், நல்ல பயிற்சிகளையும் அளித்தார்கள். இதனால் அரசு பள்ளிக்கூடங்களின் கல்வித்தரம் உயர்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இப்போது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற அறிவிப்பு கூட இல்லாமல் மழலையர் வகுப்புகள் முடக்கப்பட்டு உள்ளன. தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிக்கூடங்களை மூடுவதில் அதிக அக்கறை செலுத்துவதுபோன்றே தொடர் நடவடிக்கைகள் காட்டுகின்றன. எனவே தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு பள்ளிக்கல்வித்துறையின் அவலத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.