பொது வேலை நிறுத்தத்தின்போது பெரம்பலூரில் மறியல்-ஆர்ப்பாட்டம்
பொது வேலை நிறுத்தத்தின்போது பெரம்பலூரில் மறியல்-ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற 28, 29-ந்தேதிகளில் நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்து பெரம்பலூர் மாவட்ட அனைத்து மத்திய-மாநில தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் ஆயத்த மாநாடு நேற்று நடந்தது. சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட கவுன்சில் தலைவர் குமார், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். மத்திய அரசின் சீரழிவு கொள்கைகளை விளக்கவும், பொது வேலை நிறுத்தத்திற்கு மக்களிடம் ஆதரவு கோரியும் வருகிற 21, 22-ந்தேதிகளில் மாவட்டம் முழுவதும் ஒன்றிய தலைநகரங்களில் பரப்புரை மேற்கொள்ளப்படும். அன்றைய தினம் மாலை நேரத்தில் தெருமுனை கூட்டங்கள், ஆலை வாயிற் கூட்டங்கள், தொழிலாளர் குடியிருப்புகளில் கூட்டங்கள் நடத்தப்படும். மேலும் 22-ந்தேதி ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 26-ந் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், வணிகர் சங்க தலைவர்கள், மக்கள் அமைப்புகள் ஆகியவற்றின் ஆதரவு கோரப்படும். மத்திய அரசை கண்டித்து வருகிற 28-ந்தேதி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் மறியல் போராட்டமும், 29-ந்தேதி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்று ஆயத்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதில் அனைத்து மத்திய-மாநில தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.