சேலத்தில் ஓடையில் வாலிபர் பிணம்-கொலையா? போலீசார் விசாரணை
சேலத்தில் ஓடையில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது. அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஓடையில் 30 வயதுடைய வாலிபர் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவு வந்த பிறகு தான், அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.