ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டாா்.
கடத்தூர்
கோபி அருகே உள்ள நம்பியூர் அழகம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் அவினாசி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் வேலை செய்து வந்தார். ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால் தங்கராஜுக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில் சிறுமியிடம் தங்கராஜ் ஆசை வார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் சில நாட்களாக தங்கராஜ், குடிபோதையில் சிறுமியை அடித்து உதைத்தாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமி திருமண வயது அடையாத விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை திருமணம் செய்ததாக தங்கராஜை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.