ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடியவருக்கு 1½ ஆண்டு சிறை; ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு

ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடியவருக்கு 1½ ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2022-03-12 21:10 GMT
ஈரோடு
ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடியவருக்கு 1½ ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
செல்போன் திருட்டு
ஈரோடு மார்க்கமாக செல்லும் ரெயில்களில் தொடா்ந்து பயணிகளின் செல்போன் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து ரெயில் பயணிகள் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் திருடனை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடியதாக, கடந்த 2021-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் அருகே உள்ள கூலிப்பட்டி பகுதியை சேர்ந்த சவடப்பன் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 3 பயணிகளிடம் செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.
1½ ஆண்டு சிறை
இதைத்தொடர்ந்து ஈரோடு கோர்ட்டு உத்தரவுப்படி சவடப்பன் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு ஈரோடு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்2 -ல் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று மாஜிஸ்திரேட்டு நாகலட்சுமி தீர்ப்பளித்தார்.
அவர் தனது தீர்ப்பில் குற்றவாளி சவடப்பனுக்கு ஒவ்வொரு வழக்கிற்கும் தலா 6 மாதங்கள் என மொத்தம் 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் சவடப்பனை கோவைக்கு அழைத்து சென்று மத்திய சிறையில் அடைத்தனர்

மேலும் செய்திகள்