அரசு பஸ்களின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்
அரசு பஸ்களின் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்க கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்:
அரசு பஸ்களின் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்க கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவ-மாணவிகள்
தஞ்சை மாநகரில் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி, குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் கல்லூரிகள், பள்ளிகள் அதிகஅளவில் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களில் படிப்பதற்காக தஞ்சை மட்டுமின்றி அதை சுற்றிள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தஞ்சை மாநகருக்கு வந்து செல்கின்றனர்.
அதேபோல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பஸ்களில் தான் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக கிராமப்புறங்களில் இருந்து காலை, மாலை அலுவலக நேரத்தில் தஞ்சை மாநருக்கு வந்து செல்ல குறிப்பிட்ட சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
படிக்கட்டில் பயணம்
இதனால் அந்த பஸ்களில் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர்கள் முண்டியடித்து ஏறக்கூடியநிலை ஏற்படுகிறது. பஸ்சிற்குள் அமரவும், நிற்கவும் இடவசதி இல்லாத காரணத்தினால் ஆபத்தான நிலையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க வேண்டியதுள்ளது. பள்ளி வேலை நாட்களில் காலை, மாலை வேளைகளில் தஞ்சைக்கு வந்து செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. பஸ்களில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் மாணவர்கள் மீது சாலைகளில் அதிவேகத்துடன் செல்லும் மற்றொரு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக தஞ்சையில் இருந்து திருவையாறு, பூதலூர், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் அரசு பஸ்களில் நாள்தோறும் மாணவர்கள் படியில் தொங்கியபடியும், கால்களை சாலையில் உரசியவாறும் ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர்.
கட்டுப்படுத்த முடியவில்லை
சில அரசு பஸ்களில் எழுதப்பட்டுள்ள படியில் பயணம், நொடியில் மரணம் என்ற வாசகத்தை மறந்துவிட்டு மாணவர்கள் பந்தாவாக படிக்கட்டில் தொங்கி செல்கின்றனர். படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ய யாரையும் டிரைவர்கள், கண்டக்டர்கள் அனுதிக்கக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இருந்தாலும் கிராமப்பகுதிகளில் குறைந்தஅளவு பஸ்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படுவதால் பஸ்களில் பயணம் செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை டிரைவர், கண்டக்டரால் கட்டுப்படுத்த முடியவில்லை. பஸ் படிக்கட்டு பயணத்தினால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் பள்ளி நேரங்களில் கிராமப்பகுதிகளுக்கான வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பந்தாவாக படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெரும்பாலான அரசு டவுன் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பழுது பார்த்து தான் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் படிக்கட்டுகள் எல்லா பஸ்களிலும் வலுவான நிலையில் தான் இருக்கும் என சொல்ல முடியாது. இதனால் ஒரு படிக்கட்டில் மாணவர்கள் பலர் நின்று கொண்டும், தொங்கியபடியும் வந்தால் படிக்கட்டு உடைவதற்கு வாய்ப்பு உள்ளது. இவற்றை எல்லாம் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்தாகும்.
சமூக ஆர்வலர்கள் கருத்து
மேலும் இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, அரசு பஸ்களில் படிக்கட்டில் தொங்கி கொண்டு மாணவர்கள் செல்வதை தினமும் பார்க்க முடிகிறது. மிகவும் ஆபத்தான பயணத்தை தான் இளைஞர்கள் மேற்கொள்கின்றனர். கிராமப்புறங்களில் இருந்து தஞ்சை மாநகருக்கு பஸ்பாஸ் மூலமும், இலவச பயணம் மூலம் செல்ல வேண்டும் என்றால் அரசு பஸ்களை தான் எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அரசு பஸ்கள் குறைந்தஅளவில் இயக்கப்படுவதால் கூட்டநெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
காலைநேர பஸ்களை விட்டுவிட்டால் பள்ளி, கல்லூரிகளுக்கோ, வேலை செய்யும் அலுவலகங்களுக்கோ குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. அதேபோல் மாலை நேரத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் ஊருக்கு செல்லக்கூடிய பஸ்களை பார்த்தவுடன் புத்தக பையை தோளில் சுமந்து கொண்டு வேகமாக ஓடிச் சென்று ஏறி இடம் பிடிக்க முயற்சிப்பதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும். இல்லையென்றால் மாணவ, மாணவிகளுக்கென தனியாக பஸ்களை இயக்க வேண்டும் என்றனர்.