மினிவேன் மோதி பெண் தொழிலாளி சாவு
கபிஸ்தலம் அருகே மினிவேன் மோதி பெண் தொழிலாளி இறந்தார். இதனை கண்டித்து அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே மினிவேன் மோதி பெண் தொழிலாளி இறந்தார். இதனை கண்டித்து அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பெண் தொழிலாளி சாவு
கபிஸ்தலம் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் வசிப்பவர் விஸ்வலிங்கம். இவரது மனைவி பிச்சையம்மாள்(வயது52). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று பிச்சையம்மாள் கும்பகோணம்- திருவையாறு சாலையில் இந்திராநகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கும்பகோணத்தில் இருந்து திருவையாறு நோக்கி அதிவேகமாக வந்த மினிவேன் எதிர்பாராதவிதமாக பிச்சையம்மாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சாலைமறியல்
தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மினி வேன் டிரைவரை கைது செய்யக் கோரி திடீர் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யம்பேட்டை வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
டிரைவர் கைது
இதுகுறித்து பிச்சையம்மாள் மகன் சோமசுந்தரம் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிவேன் டிரைவர் ஈரோட்டை சேர்ந்த வைகுண்டமூர்த்தி( 36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிச்சையம்மாள் உடலை போலீசார் கைப்பற்றி பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.