தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3184 வழக்குகளுக்கு தீர்வு

மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,184 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Update: 2022-03-12 19:58 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கடலூர் நீதிமன்றத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவஹர் தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செந்தில்குமார், தொழிலாளர் நல நீதிமன்ற தலைவர் சுபாஅன்புமணி, போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி, மகிளா நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பாக்கியம் வரவேற்றார்.
இதையடுத்து மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.

3,184 வழக்குகள்

இதில் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகர், முதன்மை சார்பு நீதிபதி பஷீர், கூடுதல் சார்பு நீதிபதி-2 மோகன்ராஜ், சிறப்பு சார்பு நீதிபதி (நிலஎடுப்பு) ஜெனிபர், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 சிவபழனி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-3 ரகோத்தமன், கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் மாவட்ட தாலுகா நீதிமன்றங்களான பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம்,  திட்டக்குடி, பரங்கிப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றங்களிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 9,492 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 3184 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.26 கோடியே 41 லட்சத்து 25 ஆயிரத்து 332 வசூலிக்கப்பட்டது.

விருத்தாசலம்

விருத்தாசலத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடந்தது. இதற்கு 3-வது கூடுதல் அமர்வு நீதிபதி பிரபா சந்திரன் தலைமை தாங்கினார். வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், முதன்மை சார்பு நீதிபதியுமான ஜெயசூர்யா முன்னிலை வகித்தார். கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மனோகரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மணிமேகலை, மாஜிஸ்திரேட்டுகள் ஆனந்த், வெங்கடேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விபத்து காப்பீடு வழக்கு, சொத்து வழக்கு, நிறைவேற்று மனு வழக்கு, காசோலை வழக்கு, குற்றவியல் வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரணை செய்ததில் 462 வழக்குகளுக்கு ரூபாய் 2 கோடியே 11 லட்சத்து 341 ரூபாய்க்கு தீர்வு ஏற்படுத்தினார்கள்.

 இதில் வட்ட சட்ட பணிகள் குழு வக்கீல்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு இளநிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி செய்திருந்தார்.

மேலும் செய்திகள்