கார் மீது பஸ் மோதல்; 6 பேர் காயம்

கார் மீது பஸ் மோதல்; 6 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-03-12 19:29 GMT
ஆவூர்:
சிவகாசியை சேர்ந்தவர்கள் சுரேஷ் மகன் அருண் (வயது 28), போஸ் மகன் டேனியல் (27), பராசக்திவேல் என்பவரது மகன் மோகன் (27). நண்பர்களான இவர்கள் 3 பேரும் தஞ்சாவூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு காரில் சிவகாசியில் இருந்து நேற்று மதியம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். காரை மோகன் ஓட்டி சென்றார். மதுரை ரோட்டில் இருந்து புதுக்கோட்டை சாலையை கடந்து தஞ்சாவூர் சாலையில் சேரும் ரிங் ரோட்டில் நேற்று மாலை மாத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து 50 பயணிகளுடன் ஆவூரை நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் சாலையிலிருந்து தூக்கி வீசப்பட்ட காரின் இடது புறம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் காருக்குள் பயணம் செய்த டிரைவர் உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த பஸ் பயணிகள் மற்றும் அவ்வழியே சென்றவர்கள் காருக்குள் உயிருக்கு போராடிய மோகன், அருண், டேனியல் ஆகிய 3 பேரையும் போலீசார் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் டேனியல், அருண் ஆகிய இருவரும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. பஸ்சில் பயணம் செய்த 3 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு மாத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்