செல்போன் வியாபாரி வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை
செல்போன் வியாபாரி வீட்டில் 46 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது
மதுரை,
மதுரை வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்தவர் விமலநாதன் (வயது 35). இவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில், தனது வீட்டை சீரமைக்க திட்டமிட்டு, அந்த பகுதியை சேர்ந்த காண்டிராக்டரிடம் சீரமைப்பு பணிகளை ஒப்படைத்திருந்தார். அதன்படி, 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விமலநாதன் வீட்டில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் விமலநாதன் நேற்று முன்தினம் தன் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 46 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார். ஆனால், நகைகள் மாயமானது குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.
இதனை தொடர்ந்து விமலநாதன், திலகர் திடல் போலீசில் புகார் அளித்தார். மேலும், வீட்டில் வேலை பார்த்த ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் வேலை செய்த ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.