திருமங்கை ஆழ்வார் சன்னதியில் சிறப்பு வழிபாடு
பங்குனி திருவிழாவை முன்னிட்டு திருமங்கை ஆழ்வார் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே திருநகரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்யதேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. பஞ்ச (5) நரசிம்மர்களில் யோக, இரணிய நரசிம்மர்கள் இந்த கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். வைணவ பெரியவர்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னராக இந்த பகுதியில் அரசாட்சி செய்து வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதன் காரணமாக இவருக்கு இந்த கோவிலில் தனி சன்னதி உள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூன்றாவது நாளான நேற்று திருமங்கை ஆழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி குமுதவல்லி நாச்சியார், திருமங்கை ஆழ்வாருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தன. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க புறப்பாடு நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன், வேடுபறி உற்சவம் கமிட்டி செயலாளர் ரகுநாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.