மாவட்டத்தில் பதநீர் விற்பனை தீவிரம்
மண்டல பனைபொருள் பயிற்சி மையம் சார்பில் மாவட்டத்தில் பதநீர் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கருப்பட்டி காய்ச்சும் பணியும் தொடங்கியுள்ளது.
கடலூர்,
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே கடலூர் மாவட்டத்தில் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்கவும், வெப்பத்தை தணிக்கவும் பொதுமக்கள் குளிர்பான கடைகளை நாடிச் செல்கின்றனர். மேலும் அதிக நீர்சத்து நிறைந்த பதநீர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் உள்ளிட்டவற்றையும் பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டு ஓரளவு வெப்பத்தின் தாக்கத்தை தணித்து வருகின்றனர்.
இதனால் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய், இளநீர் ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்த வரிசையில் தற்போது பதநீர் விற்பனையும் இடம்பெற்றுள்ளது. தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழங்களுக்கு போட்டியாக கடலூர் நகரில் ஆங்காங்கே சாலையோரங்களில் பதநீரை பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
விற்பனை
மேலும் கடலூர் மண்டல பனைபொருள் பயிற்சி மையம் சார்பில் தினசரி பதநீர் இறக்கப்பட்டு, அவை 200 மில்லி லிட்டர் அளவுள்ள பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர கருப்பட்டி காய்ச்சும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கடலூர் மண்டல பனைபொருள் பயிற்சி மைய முதல்வர் கணபதி கூறுகையில், 4.39 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த பயிற்சி மையத்தில் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. இங்கிருந்து தினசரி காலையில் பதநீர் இறக்கப்படுகிறது. பின்னர் அவை எந்திரம் மூலம் 200 மில்லி லிட்டர் அளவுள்ள பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு முகவர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு ஒரு பாக்கெட் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கருப்பட்டி காய்ச்சும் பணி
பதநீரில் 85 சதவீதம் நீர்ச்சத்தும், 12 சதவீதம் சர்க்கரைச் சத்தும் உள்ளது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும், வைட்டமின்கள் சி, பி, டி ஆகியவையும் உள்ளன. பதநீரில் உள்ள இரும்புச்சத்து பித்தத்தை நீக்குகிறது. பற்களின் வளர்ச்சிக்கும், மலச்சிக்கலைப் போக்கவும் பதநீர் உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு ரொம்ப நல்லது. இதுதவிர இங்கு தற்போது கருப்பட்டி காய்ச்சும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு கிலோ கருப்பட்டி ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.