பாலக்கோடு அருகே பிளஸ்2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பாலக்கோடு அருகே பிளஸ்2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பிளஸ்-2 மாணவி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள தீத்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகள் காவ்யா (வயது 17). இவர் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.