கள்ளக்குறிச்சி அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
கள்ளக்குறிச்சி அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகவேல் என்கிற பைனான்ஸ் ராஜா (வயது 43). இவர் கரூர் மாவட்டம் வெள்ளியானை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை உள்ளிட்ட வழக்கு தொடா்பான விசாரணைக்கு, அரவக்குறிச்சி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ராஜாவை நேற்று முன்தினம் காலை கடலூர் ஆயுதப்படை போலீசார் கடலூர் மத்திய சிறையில் இருந்து பஸ்சில் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
பஸ்சில் இருந்து குதித்தார்
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு அனைவரும் கடலூருக்கு புறப்பட்டனர். அப்போது சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக கடலூர் சென்ற அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 1.45 மணியளவில் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் நீலமங்கலம் மேம்பாலத்தின் கீழ் சாலையில் உள்ள வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியபோது ராஜா திடீரென பஸ்சில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஆயுதப்படை போலீசார் பஸ்சில் இருந்து கீழே இறங்கி அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் ராஜா அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு
இதுபற்றி கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும் ராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாடூர் சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா, நீலமங்கலம் மேம்பாலம் பகுதி, கள்ளக்குறிச்சி நகரப்பகுதி, ஏமப்பேர் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து ராஜாவை தேடி வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் இருந்து குதித்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.