தரமற்ற கட்டுமானத்தை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் தடுப்பணை கட்டும் பணி 1½ ஆண்டாக முடக்கம்

ஆண்டிப்பட்டி அருகே தரமற்ற முறையில் செய்த தடுப்பணை கட்டும் பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால், புதிய தடுப்பணை கட்டும் பணி 1½ ஆண்டாக முடங்கி கிடக்கிறது.

Update: 2022-03-12 15:23 GMT
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கோத்தலக்குண்டு மலையடிவாரத்தில் வண்ணானூத்து ஓடை அமைந்துள்ளது. மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த ஓடை வழியாக சென்று, வைகை ஆற்றில் இருந்து அம்மச்சியாபுரம் வழியாக செல்லும் ராஜவாய்க்காலில் சங்கமிக்கும். இந்த ஓடையில் தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதன் மூலம் அப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக பயிர் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். எனவே தடுப்பணை அமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த ஓடையில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கியது. அப்போது சிமெண்டு கலவைக்கு பதில் செம்மண் கலவையால் தடுப்பணை கட்டப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தடுப்பணையை தரமற்றதாக கட்டுவதை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனால் இரவோடு இரவாக தடுப்பணை கட்டுமானம் பெயர்த்து எடுக்கப்பட்டது. அங்கு இருந்த கட்டுமான பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
பணிகள் முடக்கம்
இதுகுறித்து அப்போதைய மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் விசாரணை நடத்தினார். இதையடுத்து தரமற்ற முறையில் தடுப்பணை கட்டியதாக ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. வேறு ஒப்பந்ததாரரிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது. 
இதையடுத்து தடுப்பணை தரமான முறையில் மீண்டும் கட்டப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த 1½ ஆண்டாக எந்தவித கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாமல் தடுப்பணை பணிகள் முடங்கி கிடக்கிறது.
கலெக்டர் விசாரிக்க வேண்டும்
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், "தரமற்ற தடுப்பணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தியதற்கு தண்டனையாக இப்படி தடுப்பணை கட்டும் பணிகள் முடங்கிக் கிடக்கிறேதா? என எண்ண தோன்றுகிறது. இந்த தடுப்பணை கட்டப்பட்டால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவார்கள். எனவே, தடுப்பணை கட்டுமான பணிகள் முடங்கி கிடப்பது தொடர்பான விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் நேரடி விசாரணை நடத்தி தரமான தடுப்பணை கட்டிகொடுக்க வேண்டும்" என்றனர்.

மேலும் செய்திகள்