கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், பாரதநேரு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திவான்சாபுதூரில் கால்வாய் மறைவில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
போலீசார் வருவதை அறிந்த அங்கிருந்த நபர் தப்பி ஓடி விட்டார். இதை தொடர்ந்து போலீசார் அங்கு மூட்டைகளில் இருந்த 1050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டை பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய ஆனைமலையை சேர்ந்த வெங்கடாச்சலம் (வயது 42) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 பேர் கைது
இதேபோன்று கிழவன்புதூர் வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதால் ஆட்டோவை ஓட்டி வந்த நபர் கேரளாவை சேர்ந்த முஜிபுர்ரகுமான் (42) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆட்டோவுடன் 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனைமலை காந்தி ஆசிரமம் வழியாக வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தியதாக ஆனைமலையை சேர்ந்த குருசாமி (23) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து காருடன் 1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் கேரளாவுக்கு கடத்த முன்றன 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.