ஆனைகுளத்தம்மன் கோவில் தேரோட்டம்

வேலப்பாடி ஆனைகுளத்தம்மன் கோவில் தேரோட்டத்தை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Update: 2022-03-12 12:26 GMT
வேலூர்

வேலூர் வேலப்பாடியில் கிராம தேவதை ஆனைகுளத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

 அதன்படி இந்தாண்டிற்கான தேர்திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 1-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று  பால்குட அபிஷேகமும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. 

தேர் திருவிழாவான இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, அலங்காரம் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் ஆனைகுளத்தம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை 8 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. 

இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்தனர்.

 தேரோட்டத்தின் முன்பாக சிறுவர்கள் பலர் சிலம்பாடியபடி சென்றனர்.

 நாளை (ஞாயிற்றுக்கிழமை) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, படவேட்டம்மனுக்கு காப்பு கட்டுதலும், வருகிற 15-ந் தேதி படவேட்டம்மன் உற்சவமும், இரவில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை தேர் திருவிழாக்குழுவினர் மற்றும் வேலப்பாடி பேட்டைவாசிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்