பொது இடத்தில் அத்துமீறிய காதல் ஜோடியை கண்டித்த வக்கீல்கள் மீது தாக்குதல்
பொது இடத்தில் அத்துமீறிய காதல் ஜோடியை கண்டித்த வக்கீல்களை தாக்கிய காதல் ஜோடி மற்றும் அவர்கள் அழைத்து வந்த கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் உள்ள இரவு உணவு கடையில் வக்கீல்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அருகில் அனைவரும் பார்க்கும் வகையில் காதல் ஜோடி ஒன்று இன்ப களியாட்டத்தில் ஈடுபட்டது. பொது இடத்தில் இப்படி நடக்கலாமா? என்று அவர்களை வக்கீல்கள் கண்டித்தனர். உடனே அங்கிருந்து வெளியேறிய காதல் ஜோடி சற்று நேரத்தில் ஒரு கும்பலாக அங்கு வந்தனர். அந்த கும்பல் வக்கீல்கள் மீது பீர்பாட்டிலால் தாக்கினார்கள். இதில் வக்கீல்கள் இருவருக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. தாக்கிய கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
காயம் அடைந்த வக்கீல்கள் இருவரும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் மெரினாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வக்கீல்கள் கொடுத்த புகார் அடிப்படையில் மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதல் ஜோடி மற்றும் அவர்கள் அழைத்து வந்த கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.