ஓடும் மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர், ஓடும் மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-03-11 23:58 GMT
பெரம்பூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 19). அதேபோல் திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (19). நண்பர்களான இவர்கள் இருவரும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து மாணவர்கள் இருவரும் தங்கள் வீ்ட்டுக்கு செல்வதற்காக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரெயிலில் சக மாணவர்களுடன் சென்றனர். மாணவர்கள் அனைவரும் கும்பலாக ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

தவறி விழுந்து சாவு

பெரம்பூர் லோகோ-கேரேஜ் ரெயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் வெங்கடேஷ், விஜய் இருவரும் ஓடும் மின்சார ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதனால் அதி்ர்ச்சி அடைந்த சகமாணவர்கள் கூச்சலிட்டனர்.

உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயிலில் இருந்து விழுந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 2 பேரையும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். விஜய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

பெற்றோர் கதறல்

இதுகுறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான மாணவர் வெங்கடேசின் உடலை, பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்து பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து உயிரிழந்து வருகிறார்கள். இனியாவது மாணவர்கள் இதுபோன்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே போலீசார் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்