தாளவாடி அருகே கிராமத்துக்குள் உலா வந்த ஒற்றை யானை; பொதுமக்கள் அச்சம்
தாளவாடி அருகே கிராமத்துக்குள் உலா வந்த ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் கிராமத்துக்குள் புகுந்து அங்கு பயிரிட்டு உள்ள பயிர்களை நாசம் செய்வதும், வீடுகளை சூறையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் ஒற்றை யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி தாளவாடியை அடுத்த பாலபடுக்கை கிராமத்தில் புகுந்தது. பின்னர் அந்த யானை அந்த கிராமத்தில் உள்ள வீதிகளில் உலா வந்தது. யானையை கண்டதும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். உடனே பொதுமக்கள் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் யனையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். ஊருக்குள் யானை புகுந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். கிராமத்துக்குள் யானை நுழையாதவாறு வனப்பகுதியையொட்டி அகழிகள் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.