தாளவாடி அருகே கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

தாளவாடி அருகே கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.

Update: 2022-03-11 22:03 GMT
தாளவாடி
தாளவாடியை அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட திகினாரை ஜோரகாடு பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 55). விவசாயி. இவர் 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் வெளியேறி சின்னச்சாமியின் தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அந்த யானைகள் கரும்புகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின. யானையை கண்டதும், அங்கு காவலுக்கு படுத்துக்கிடந்த சின்னச்சாமி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அருகில் உள்ள விவசாயிகளுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.  இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், தகர டப்பாவால் ஒலி எழுப்பியும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் யானைகள் காட்டுக்குள் சென்றன. பின்னர் மீண்டும் யானைகள் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. உடனே யானைகளை விவசாயிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

மேலும் செய்திகள்