சத்தியமங்கலம் அருகே வீதி உலா: பவானி ஆற்றை பரிசலில் கடந்த பண்ணாரி அம்மன்
சத்தி அருகே பவானி ஆற்றை பண்ணாரி அம்மனின் சப்பரம் பரிசலில் கடந்து சென்றது.
சத்தியமங்கலம்
சத்தி அருகே பவானி ஆற்றை பண்ணாரி அம்மனின் சப்பரம் பரிசலில் கடந்து சென்றது.
குண்டம் விழா
சத்தியமங்கலம் அருகே பிரசித்திப்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 8-ந் தேதி அதிகாலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து அன்று இரவு பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் பண்ணாரி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் சப்பரத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது. கோவிலில் இருந்து தொடங்கிய அம்மனின் வீதி உலா சிக்கரசம்பாளையம், சிக்கரசம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், நெரிஞ்சிப்பேட்டை, கொத்தமங்கலம், கொத்தமங்கலம் புதூர் வழியாக நேற்று முன்தினம் இரவு தொட்டம்பாளையம் சென்றடைந்தது.
வீதி உலா
இதையடுத்து அம்மனின் சப்பரம் ெதாட்டம்பாளையத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் தங்க வைக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை 7 மணிக்கு அம்மன் வீதி உலா ரங்கநாதர் கோவிலில் இருந்து தொடங்கியது. தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம் புதூர், இக்கரை தத்தப்பள்ளி ஆகிய பகுதிகளில் அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
பரிசலில்...
மாலை 6 மணி அளவில் இக்கரை தத்தப்பள்ளியில் இருந்து பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்து அம்மன் சப்பரம் அக்கரை தத்தப்பள்ளியை சென்றடைந்தது. அக்கரை தத்தப்பள்ளி கிராமத்தில் இரவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
இதையடுத்து இரவு 10 மணி அளவில் வீதி உலா முடிந்ததும் அக்கரை தத்தப்பள்ளியில் உள்ள அம்மன் கோவிலில் சப்பரம் தங்க வைக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு அம்மனின் சப்பரம் அக்கரை தத்தப்பள்ளியில் இருந்து புறப்பட்டு உத்தண்டியூர் செல்கிறது.