நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் 3 மாதத்தில் திறக்கப்படும் மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் 3 மாதத்தில் திறக்கப்படும் என்று மேயர் மகேஷ் கூறினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் 3 மாதத்தில் திறக்கப்படும் என்று மேயர் மகேஷ் கூறினார்.
மக்கள் கோரிக்கை
நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக மகேஷ் பதவி ஏற்றபிறகு மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், வளர்ச்சித்திட்டங்கள் குறித்து தினமும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் மற்றும் பொருட்காட்சி மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
நேற்று நாகர்கோவில் பீச் ரோட்டில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கிற்கு சென்று அங்கு குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு, அகற்றும் பணி நடைபெறுவதை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படும் இடத்தையும் அவர் பார்வையிட்டார். அப்போது அந்த பகுதி மக்கள் வலம்புரி விளை குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேயர் மகேஷிடம் கோரிக்கை வைத்தனர்.
மாநகராட்சி அலுவலக கட்டிடம்
அதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். விரைவில் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி அலுவலகத்தையும் நேரில் ஆய்வு செய்தார். அதன்பிறகு அங்குள்ள கூட்ட அரங்கில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், துணைமேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மாநகர நல அதிகாரி விஜய்சந்திரன், சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை, மேயரின் உதவியாளர் ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
3 மாதத்தில் திறப்பு
பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டிடம் கட்டுமானப்பணி ரூ.10.5 கோடியில் நடைபெற்று வருகிறது. பிளம்பிங், எலக்ட்ரிக்கல், பர்னிச்சர் வேலைகள் முடிக்கப்பட வேண்டியுள்ளது. இன்னும் 3 மாதத்தில் பணிகளை முடித்து, புதிய அலுவலக கட்டிடத்தை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கும், அருகில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கும் உள்ள பாதை தொடர்பான பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.
வலம்புரிவிளை உரக்கிடங்குகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக குப்பைகளை தரம்பிரிக்கும் பணி 2 எந்திரங்கள் மூலம் நடந்து வருகிறது. மேலும் இந்த பணியை விரைவுபடுத்தும் வகையில் இன்னும் 2 எந்திரங்களை கொண்டு அதாவது 4 எந்திரங்கள் மூலமாக குப்பைகள் தரம்பிரிக்கப்பட உள்ளது. இதுவரை 8 சதவீத குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் ஒரு ஆண்டுக்குள் குப்பைகள் அகற்றப்படும். ரூ.26 கோடியில் நடைபெறும் சாலைப்பணிகளில் இதுவரை 40 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இன்னும் 15 நாட்களில் மீதமுள்ள பணிகளும் முடிக்கப்படும். வருகிற 20-ந் தேதிக்குப்பிறகு மாநகராட்சியின் முதல் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மேயர் மகேஷ் கூறினார்.