பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றம்

வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-03-11 20:42 GMT
தலைவாசல்:-
வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாலசுப்பிரமணியசாமி கோவில்
தலைவாசல் அருகே வடசென்னிமலையில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஆண்டுக்கான பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இதையொட்டி கோவில் அடிவாரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில்  சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. அதன் பிறகு பாலசுப்பிரமணி சாமி கோவிலில் சிறப்பு யாக பூஜை, கொடிமரம், பலிபீடம், மயில் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் சாமி பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் ஆகிய பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
கொடியேற்றம்
பின்னர் காட்டுக்கோட்டை புதூர் கட்டளைதாரர்கள் ஊர்வலமாக திரண்டு வந்து அரோகரா, அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சேவல் கொடியை ஏற்றினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் காட்டுக்கோட்டை புதூர் கிராம மக்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வருகிற 21-ந் தேதி வரை தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரமும். கிரிவலமும் வீதி உலாவும் நடைபெறுகிறது. வருகிற 18-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ேதரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் மாலை 4 மணி  அளவில் காட்டுக்கோட்டை புதூர் கட்டளைதாரர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். 
20-ந் தேதி சத்தாபரணம், சாமி ஊர்வலம் நடக்கிறது. 21-ந் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குணசேகரன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்