கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு, கடையில் தீப்பிடித்தது

ஜலகண்டாபுரம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு, கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை, பணம் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

Update: 2022-03-11 20:42 GMT
மேச்சேரி:-
ஜலகண்டாபுரம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு, கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை, பணம் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
விவசாயி
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள எடையப்பட்டி கலர்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வெங்கடாசலம். இவருடைய மனைவி ஜெயலட்சுமி, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் வெங்கடாசலத்தின் தாயார் தங்கம்மாள் என்பவரும் அவருடன் வசித்து வருகிறார்.
ெவங்கடாசலம் தனது வீட்டின் அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஓலை கீற்றால் வேயப்பட்ட வீட்டில் குடியிருந்து கொண்டு அதன் அருகில், மளிகை கடை நடத்தி வருகிறார். 
சிலிண்டர் வெடித்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வெங்கடாசலம் உள்பட அவருடைய குடும்பத்தினர் 5 பேர் இருந்தனர். அப்போது ஜெயலட்சுமி வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். திடீரென்று கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதுடன், சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்தது. உடனே வீட்டில் இருந்த 5 பேரும் வெளியே ஓடி வந்தனர். மேலும் வீட்டின் அருகில் இருந்த மளிகை கடைக்கும் தீ பரவியது. இதனால் வீடும், கடையும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கும், ஜலகண்டாபுரம் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீடு, கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தன.
ரூ.5 லட்சம் பொருட்கள்
மேலும் வீட்டில் இருந்த நிலப்பத்திரம், நகை, பீரோவில் இருந்த ரொக்கம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம், ரூ.2 லட்சம் மதிப்பிலான மளிகை கடை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், துணிகள் ஆகியவை தீயில் எரிந்தன. இதன் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து வெங்கடாசலம் ஜலகண்டாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்