சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-03-11 20:26 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநில துணைத் தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தை நிறைவேற்றி, இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் நகராட்சி எல்லைகளை விரிவாக்கம் செய்து, வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும், விரிவாக்கப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். வேப்பந்தட்டை வட்டம், வெங்கலத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவர் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட செயலாளர் சிவகுமார், பொருளாளர் வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி திருஞானசெல்வம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்