கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களை இணைக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-11 20:14 GMT
கும்பகோணம்:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களை இணைக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சங்க உறுப்பினர் 
கும்பகோணம் அருகே உள்ள தேவனாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இணைவதற்கு ஏராளமான விவசாயிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர். விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை விவசாயிகள்  கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கப்படவில்லை.
இதனால் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும், வேளாண் கடன் மற்றும் அரசின் பிற சலுகைகளும், அரசின் திட்டங்களின் பயன்களையும் பெற முடியாத நிலை உள்ளது. 
இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் விவசாயிகள் பலமுறை முறையிட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை. 
ஆர்ப்பாட்டம் 
எனவே கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பித்துள்ள விவசாயிகள் அனைவரையும் உடனடியாக சங்க உறுப்பினர்களாக இணைக்க வலியுறுத்தி கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெரு பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அலுவலகம் முன்பு,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில  துணைத்தலைவர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் கண்ணன், தேவனாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்