8 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாத அங்கன்வாடி கட்டிடம்

சீர்காழி அருகே 8 ஆண்டுகளாக கட்டிமுடிக்கப்படாத அங்கன்வாடி கட்டிடத்தை விரைவில் முடித்துபயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-11 19:08 GMT
சீர்காழி:
சீர்காழி அருகே 8 ஆண்டுகளாக கட்டிமுடிக்கப்படாத அங்கன்வாடி கட்டிடத்தை விரைவில் முடித்துபயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அங்கன்வாடி மைய கட்டிடம்
சீர்காழி ஊராட்சி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட காடாக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தை சேர்ந்த ஏழை-எளிய பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
இதனைத் தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கண்ட பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு இன்று வரை பணி முழுமை பெறாமல் உள்ளது. இந்த கட்டிடத்தில் குடிநீர், மின்விளக்கு, கதவு, ஜன்னல் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இதுநாள் வரை செய்யப்படாமல் பணி முழுமை பெறாமல் பாதியிலேயே உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு குழந்தைகளுக்கு கல்வி, உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கடந்த 8 ஆண்டுகளாக முழுமை பெறாமல் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை விரைவில் முடித்து மின் விளக்கு, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்து அந்த கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
விரைவில் சீரமைக்க கோரிக்கை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், காடாக்குடி கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்படாததால் இந்த பகுதியில் உள்ள குழந்தைகள் போதிய அடிப்படை வசதி இல்லாத ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டு உணவு, கல்வி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கன்வாடி மையத்தில் பணி புரியும் அங்கன்வாடி பணியாளர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் முழுமை பெறாமல் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைத்து அந்த கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்