கடற்கரையில் இலங்கையின் மர்ம படகு சிக்கியது
தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் இலங்கை படகு ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் வந்த கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளுடன் தப்பி ஓடினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனைக்குளம்,
தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் இலங்கை படகு ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் வந்த கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளுடன் தப்பி ஓடினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்ம படகு
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம்-சித்தார்கோட்டைக்கு இடைப்பட்ட ஜமீன்தார் வலசை கடற்கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக புதிதாக படகு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கு கரை ஒதுங்கி கிடந்த அந்த படகை பார்வையிட்டபோது அந்தப் படகானது இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த பிளாஸ்டிக் படகு என்பதும் அந்த படகில் மர்ம நபர்கள் சிலர் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. படகில் என்ஜின், மண்எண்ணெய் கேன் உள்ளிட்ட பொருட்களும் இருந்தன. அந்த படகின் முன்பகுதியில் O.F.R.P.A.5083.P.T.M எனவும் எழுதப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்களா?
படகில் வந்த நபர்கள் அந்த படகை ஆள் நடமாட்டமில்லாத கடற்கரையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த படகில் தங்கக் கட்டிகளை கடத்தி வந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் நோக்கில் வந்தார்களா? என கடலோர போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகில் மர்மநபர்கள் வந்து தேவிபட்டினம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் படகை நிறுத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த படகை கடலோர போலீசார் கைப்பற்றி, தேவிபட்டினம் கடலோர போலீஸ் நிலையம் அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.