நெல் மூட்டைகளை நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வேண்டும்
விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க நெல் மூட்டைகளை நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்று வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள கோலப்பாறை கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு திருக்கோவிலூர் ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் வக்கீல் தங்கம், மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யனார், பாரதிதாசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஜெயசங்கர் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கூடுதல் விலை
நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகளை விற்பனை கூடத்திற்கு எடுத்துச்செல்லும் போது வியாபாரிகள் வைத்தது தான் விலை என்ற நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதை போக்கதான், தமிழகம் முழுவதும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 33 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதினால் ஒரு மூட்டைக்கு ரூ.800 வரை கூடுதல் விலை கிடைக்கும். இதை விவசாயிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.பேசினார். முன்னதாக காடியார், மணலூர்பேட்டை, ஜம்பை, ரிஷிவந்தியம், திம்மலை, வரஞ்சரம், ஓகையூர் மற்றும் முடியனூர் ஆகிய கிராமங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தணிகாசலம், குமார், வக்கீல் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.