சிதம்பரத்தில் உயர்மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்
சிதம்பரத்தில் உயர்மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் தினேஷ் (வயது 23). இவர் நேற்று காலை சிதம்பரம் வண்டி கேட்டில் உள்ள உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி நின்று, குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடன் இதுகுறித்து அவர்கள் சிதம்பரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். அங்கு மின் கோபுரத்தில் ஏறி நின்று மிரட்டல் விடுத்த தினேசிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, அவரது தற்கொலை முடிவை கைவிட செய்தனர்.
தொடர்ந்து, தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் முரளி, சரத்குமார், கோபிநாத் ஆகியோர் உயர் மின் கோபுரத்தில் ஏறி, தினேசை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வந்தனர்.
காரணம் என்ன?
இதை தொடர்ந்து தினேசிடம் போலீசார் விசாரித்தனர். அதில், தில்லை காளியம்மன் கோவில் பகுதியில் தனது தாய் தையல்நாயகி பூ வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியில் சுந்தரி என்பவரும் பூ வியாபாரம் செய்கிறார். இதில் எனது தாய் தையல்நாயகிக்கும், சுந்தரிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
அதை தட்டி கேட்ட என்னை சுந்தரி திட்டியதாகவும், மேலும் சிதம்பர நகர போலீஸ் நிலையத்தில் என் மீது கஞ்சா வழக்கும் உள்ளது. இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. எனவே தான் தற்கொலைக்கு முயன்றேன் என்று தினேஷ் கூறினார்.
இதையடுத்து தினேசை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.