ராசிபுரம் அருகே 4 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு

ராசிபுரம் அருகே 4 கடைகளில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-03-11 17:00 GMT
ராசிபுரம்:
மிட்டாய் கடைகளில் திருட்டு
ராசிபுரத்தை அடுத்த சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் தனியார் பள்ளி அருகில் மணிகண்டன் என்பவர் ஒட்டுமொத்த மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக அவர் 3 சிறிய கடைகளை நடத்தி வருகிறார். மேலும் கடையில் முறுக்கு மற்றும் பன் போன்றவற்றையும் வியாபாரம் செய்து வருகிறார். 
நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை கடைக்கு வந்து பார்த்தபோது 3 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடையில் வைத்திருந்த ரூ.37 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
போலீசார் விசாரணை
இதேபோல் அங்கு சுரேஷ் என்பவருக்கு சொந்தமான மிட்டாய் கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து, ராசிபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது இரவில் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை  திருடி சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடைகளில் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ராசிபுரம் அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் நடந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்