தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. ரேஷன் கடை விற்பனையாளர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்தார். பின்னர் அங்குள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த செல்லதுரை மருமகள் சவுந்தர்யா (வயது 28) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்தார்.
வலைவீச்சு
இதனால் சவுந்தர்யா கூச்சலிட்டார். உடன் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை துரத்திச்சென்றும் பிடிக்க முடியவில்லை. அதற்குள் அவர் கண் இமைக்கும் நேரத்தில் மாயமாகி விட்டார். பறி போன நகையின் மதிப்பு ரூ.1¾ லட்சம் ஆகும்.
இது பற்றி செல்லத்துரை திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இருப்பினும் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.