கொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ; 500 ஏக்கரில் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசம்

கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் 500 ஏக்கரில் இருந்த அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.

Update: 2022-03-11 16:15 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் 500 ஏக்கரில் இருந்த அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.
வனப்பகுதியில் காட்டுத்தீ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகலில் கடுமையான வெப்பம் நிலவி வருவதுடன், மித‌மான‌ காற்றும் வீசி வ‌ருகிறது. இதனால் அட‌ர்ந்த‌ வ‌ன‌ப்ப‌குதிக‌ளில் காட்டுத்தீ ஏற்படுவதும், பின்னர் தானாகவே அணைந்துவிடுவதுமாக இருந்தது.  
இந்தநிலையில் கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள மச்சூர் தோகைவரை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டுத்தீ எரிய தொடங்கியது. இந்த காட்டுத்தீயானது சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பரவி செடிகள், மரங்களில் பற்றி எரிந்தது. இதனால் அந்த மலைப்பகுதி முழுவதும் கபளீகரமானது.
இதுகுறித்து தகவல் அறிந்த ெகாடைக்கானல் தீயணைப்பு படைவீரர்கள், வனத்துறையினருடன் இணைந்து மலைப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. நேற்று முன்தினம் எரிய தொடங்கிய காட்டுத்தீ நேற்று இரவு வரை எரிந்து கொண்டிருந்தது.
புகை மண்டலம்
இந்த காட்டுத்தீ காரணமாக மலைப்பகுதியில் 500 ஏக்கரில் இருந்த அரியவகை மரங்களும், மூலிகை செடிகளும் தீயில் கருகி நாசமாகி வருகின்றன. மேலும் காட்டுத்தீயால் அங்கு வசித்த வனவிலங்குகள், பறவைகள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.
 இருப்பினும் தீயணைப்பு படைவீரர்கள், வனப்பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தீத்த‌டுப்பு கோடுகள் அமைப்ப‌தில் தீவிரம் காட்டி வருகின்றனர், காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால் தோகைவரை, மச்சூர், பெருமாள்ம‌லை உள்ளிட்ட பகுதிகளும், வ‌த்த‌ல‌க்குண்டுவுக்கு செல்லும் பிரதான மலைப்பாதையும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
நடவடிக்கை
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொடைக்கானல் ம‌ச்சூர், தோகைவ‌ரை மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் இர‌வு ப‌ர‌விய‌ காட்டுத்தீயானது, காற்றின் வேக‌த்தில் பெருமாள்ம‌லை வ‌ன‌ப்ப‌குதி வ‌ரை தொட‌ர்ந்து ப‌ற்றி எரிந்து வருகிறது. தீயை க‌ட்டுப்ப‌டுத்த‌ பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றனர்.
கொடைக்கானல் பொதுமக்கள் கூறுகையில், மலைப்பகுதிகளில் தீவிபத்து ஏற்பட்டால், அதை அணைப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே மலைப்பகுதியில் தீயை அணைக்க ஹெலிகாப்டர்களை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்