பரமத்தி, கபிலர்மலை வட்டாரங்களில் வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை- அதிகாரி தகவல்

பரமத்தி, கபிலர்மலை வட்டாரங்களில் வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக இணை இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-11 14:16 GMT
பரமத்திவேலூர்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
வேளாண்மையில் புதிய உள்ளூர் தொழில்நுட்பம், புதிய எந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க உள்ளது. இதன் தொடர்ச்சியாக 2021-2022-ம் ஆண்டில் உள்ளூர் விவசாய தொழில்நுட்பங்களையும், எந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது. 
அதேபோல், இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளையும் ஊக்குவித்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படவுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி, முதலில் கைபேசியில் உழவன் செயலி மூலமாக தனது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் குத்தகைக்கு பயிர் சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம். 
விண்ணப்பம்
பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டாரத்திற்கு உட்பட்ட ‌விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவுக்கட்டணமாக ரூ.100 செலுத்தி ரசீதுடன் விண்ணப்ப படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, பின் மாநிலக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். 
விண்ணப்பங்கள் மாநிலக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும், புதிய வேளாண் எந்திர கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.60 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும்.
18-ந் தேதி கடைசிநாள்
வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிக்கு பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்படவுள்ளது. விண்ணப்பத்திற்கான கால அவகாசம் வருகிற 18-ந்் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைய இருப்பதால், தகுதியுள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ள வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்