நாட்டறம்பள்ளி அருகே டேங்கர் லாரியில் கெமிக்கல் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு

நாட்டறம்பள்ளி அருகே டேங்கர் லாரியில் இருந்து எளிதில் தீப்பற்றக்கூடிய கெமிக்கல் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-11 13:32 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே டேங்கர் லாரியில் இருந்து எளிதில் தீப்பற்றக்கூடிய கெமிக்கல் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கெமிக்கல் கசிவு

மராட்டிய மாநிலம் கோலேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் நபிசோ. இவரது மகன் பியாரெலாக் முஜாவர் (வயது 36). லாரி டிரைவரான இவர் சென்னையை அடுத்த மணலி பகுதியில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரியில் எளிதில் தீப்பற்றக்கூடிய கெமிக்கல்  (புரோப்பிலீன் ஆக்சைடு) ஏற்றிக் கொண்டு மராட்டிய மாநிலம் தானே பகுதிக்கு நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டார்.

வேலூர் வழியாக  கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா ஆத்தூர் குப்பம் பகுதியில் சென்றபோது லாரியை நிறுத்தி டயரை செக் பண்ணியபோது கெமிக்கல் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக சென்னை மணலிக்கு தகவல் தெரிவித்தார்.

போக்குவரத்துக்கு தடை

இந்த ஆக்சைடு எளிதில் தீ பிடிக்க கூடிய பொருள் என்பதால் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் அம்ஜாத்கான் தலைமையில் விரைந்து சென்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் இணைந்து போக்குவரத்தை தடை செய்தனர்.

மேலும் இது குறித்து தகவலறிந்ததும் வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல் பாரி, உதவி அலுவலர்கள் பழனி மற்றும் முகந்தன் ஆகியோர் முகாமிட்டுள்ளனர். சென்னை மணலியில்  இருந்து குழுவினர் விரைந்து சென்றனர். மும்பையை சேர்ந்த  லாரியின் உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். ஆக்சைடு கசிவு குறைந்தாலும் அவ்வழியாக செல்லும் வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்