வீடுகள் கட்டி தரக்கோரி பழங்குடியின மக்கள் தாசில்தாரிடம் மனு
வீடுகள் கட்டி தரக்கோரி பழங்குடியின மக்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்
போடி:
போடியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் சிறைக்காடு என்ற மலைக்கிராமம் உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போடி நகராட்சி குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீடுகள் கட்டுவதற்காக 72 சென்ட் நிலத்தை அவர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து ½ கிலோ மீட்டர் தொலைவில் அரசு ஒதுக்கியது. ஆனால் இன்னும் அதில் வீடுகள் கட்டப்படவில்லை.
இந்தநிலையில் சிறைக்காடு கிராமமக்கள் அணைக்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் லோகநாதன் தலைமையில் போடி தாசில்தார் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாசில்தார் செந்தில்முருகனிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அதில், தாங்கள் வசிக்கும் பகுதி குப்பை மேடாக உள்ளது. இதனால் சுவாச கோளாறு மற்றும் குழந்தைகளுக்கு தோல் வியாதிகள் ஏற்படுகிறது. மழைக் காலத்தில் தண்ணீர் வீட்டுக்குள் வருகிறது. எனவே எங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலத்தை துப்புரவு செய்து புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.