மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
. கம்பம்:
கம்பத்தில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. இந்த முகாம் காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால் மாற்றுத்திறனாளிகள் காலை 10 மணிக்கு முன்னதாகவே அங்கு வந்து காத்திருந்தனர். ஆனால் 11 மணி வரை டாக்டர்கள் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் கம்பம் வட்டார முல்லை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் புகாரிமஸ்தான், செயலாளர் கருப்பையா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சகுந்தலா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறிது நேரத்தில் முகாம் நடைபெறும் என உறுதியளித்தார். அதன்பேரில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையடுத்து சிறிது நேரத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் தகுதியுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, இலவச அறுவை சிகிச்சை, சக்கர நாற்காலி, மூன்று சக்கர மிதிவண்டி, காதொலி கருவி, ஊன்றுகோல் போன்ற உதவி உபகரணங்கள், கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, பஸ் கட்டண சலுகை, இலவச பஸ் பாஸ் போன்ற நலத்திட்ட உதவிகள் பெற பரிந்துரை செய்யப்பட்டது.