புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட தலித் அமைப்பினர் முயற்சி
தலித் மற்றும் பழங்குடி அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று புதுச்சேரி சட்டசபையை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் உள்ள தலித் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு கூறு துணைத் திட்டத்தின் நிதியை முழுமையாக செலவிடவும், அவ்வாறு செலவிடாத அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள பல்வேறு தலித் மற்றும் பழங்குடி அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று புதுச்சேரி சட்டசபையை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அவர்கள் சட்டசபை அருகே வந்தபோது சாலைகளில் தடுப்புகளை அமைத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் ஊர்வலமாக வந்த தலித் அமைப்பினர், அங்கிருந்த தடுப்புகளின் மீது ஏறி சட்டசபையை நோக்கி செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் தடுப்புகளை மீறி சட்டசபையை நோக்கி ஓடியவர்கள் சிலரையும் போலீசார் மடக்கிப் பிடித்து மீண்டும் அதே பகுதிக்கு கொண்டு வந்தனர். மேலும் முதல்-மந்திரி வந்த பின்னர் அவரை நேரடியாக சென்று சந்தித்து அவர்களது கோரிக்கையை முன்வைக்க ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து, தலித் அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு முதல்-மந்திரியின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.