நெல்லை அருகே விவசாயிகள் திடீர் போராட்டம்

விவசாயிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-03-10 23:53 GMT
நெல்லை:
நெல்லை அருகே விவசாயிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரி தடுத்து நிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணல்விளை பகுதியில் நெல் அறுவடை நடந்து வருகிறது. 
அந்த பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட 280 நெல் மூட்டைகள் ஒரு லாரியில் ஏற்றி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அரிசி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நெல்லை பழைய பேட்டை அருகே அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த லாரியை நிறுத்தி வரி செலுத்தவில்லை என்று கூறி, நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டி நுகர்பொருள் வாணிப குடோனுக்கு எடுத்துச் சென்றனர்.
திடீர் போராட்டம்
இதை அறிந்த தூத்துக்குடி பா.ஜனதா விவசாய அணி மாரியப்பன், விவசாய சங்க நிர்வாகி முருகேசன் மற்றும் விவசாயிகள் பலர் நேற்று மதியம் ராமையன்பட்டிக்கு வந்தனர். அங்கு அதிகாரிகளை கண்டித்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி லாரியை விடுவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்  அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘நோய் பரவலையொட்டி நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்க மறுப்பதால், பாவூர்சத்திரம் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய எடுத்துச் செல்கிறோம். விளைச்சல் பாதிப்பால் விவசாயிகளுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல், நெல் மூட்டைகளை விற்பனை செய்ய விடாமல் தடுத்து உள்ளனர்’’ என்றனர்.

மேலும் செய்திகள்