திருமணம் ஆன பெண்ணுக்கு கொலை மிரட்டல்;அரசு ஊழியர் மீது வழக்கு
திருமணம் ஆன பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அரசு ஊழியர் மீது வழக்கு
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கர்நாடக ஆயுதப்படை போலீஸ் அலுவலகத்தில் 42 வயது பெண் ஒருவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்த நிலையில் அந்த அலுவலகத்தில் முதல் நிலை உதவியாளராக பணியாற்றி வரும் கங்காதர் நாயக் என்பவர், காதலர் தினத்தையொட்டி அந்த பெண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் காதலர் தின வாழ்த்துக்கள் அனுப்பியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், கங்காதர் நாயக்கை சந்தித்து தனக்கு காதலர் தின வாழ்த்துகள் அனுப்பியது குறித்து கேட்டு உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை, கங்காதர் நாயக் திட்டியதாக தெரிகிறது. அதன்பின்னர் அந்த பெண்ணுக்கு கங்காதர் நாயக் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் பெண்ணை, கங்காதர் நாயக் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் கங்காதர் நாயக் மீது அல்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.