செல்போனில் பணி செய்யவே நேரம் போதவில்லை மாணவ-மாணவிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்யும் ஆசிரியர்கள்; கல்வித்துறையில் தினம் ஒரு உத்தரவால் பாதிப்பு
கல்வித்துறையில் தினம் ஒரு உத்தரவு என்று மாறி மாறி வரும் அறிவிப்புகளால் மாணவ-மாணவிகளுக்கு பாடம் எடுப்பதை விட்டு அவர்களின் விவரங்களை பதிவு செய்யவே ஆசிரியர்களுக்கு நேரம் போதவில்லை என்று ஆசிரியர்கள் தவிக்கிறார்கள்.
ஈரோடு
கல்வித்துறையில் தினம் ஒரு உத்தரவு என்று மாறி மாறி வரும் அறிவிப்புகளால் மாணவ-மாணவிகளுக்கு பாடம் எடுப்பதை விட்டு அவர்களின் விவரங்களை பதிவு செய்யவே ஆசிரியர்களுக்கு நேரம் போதவில்லை என்று ஆசிரியர்கள் தவிக்கிறார்கள்.
இதுபற்றி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:-
ஆசிரியர் பணி
சில ஆண்டுகளுக்கு முன்பு மதிப்பெண் போட்டி காரணமாக, தனியார் பள்ளிக்கூடங்களுக்கு நிகராக அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் மதிப்பெண் பெற வேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டது. இதை நிறைவேற்ற பல கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரிய-ஆசிரியைகள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த பணியை செய்தனர். இதனால் அரசுப்பள்ளிக்கூடங்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது அனைவருக்கும் தெரியும்.
எமிஸ் பதிவு முறை
இந்தநிலையில் அதிக மதிப்பெண் எடுப்பவரே முதல் மாணவர் என்ற வகையிலான தேர்வு முடிவு அறிவிப்புகளுக்கு முடிவு கட்டப்பட்டது. ஆனாலும், ஆசிரிய-ஆசிரியைகள் தங்கள் மாணவ-மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக இ.எம்.ஐ.எஸ். (எமிஸ்) எனப்படும் பதிவு முறை கல்வித்துறையில் கொண்டு வரப்பட்டது. இதன்படி எந்த ஒரு பள்ளிக்கூடத்திலும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் அடையாள எண் வழங்கப்பட்டது.
கட்டாயம்
இதன் மூலம் ஆண்டுதோறும் அந்த மாணவர் அல்லது மாணவி கல்வியை தொடருகிறாரா என்பதை கண்காணிக்கப்பட்டது. இதற்காக எமிஸ் பதிவு கட்டாயப்படுத்தப்பட்டது. ஒரு பள்ளியை விட்டு இன்னொரு பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகள் சேர மாற்றுச்சான்றிதழ் கூட அத்தியாவசியம் இல்லை. எமிஸ் எண் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
இது தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சாதகமாக மாறியது. கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவ-மாணவிகள் வேறு பள்ளி அல்லது அரசு பள்ளிக்கூடங்களில் சென்று சேர்ந்தாலும், பணம் செலுத்தும்வரை தனியார் பள்ளி எமிஸ் எண்ணை வெளிப்படுத்தாமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர். அப்போது எமிஸ் எண் சேர்க்காத அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் அதிகாரிகள் கண்டன அறிக்கைகள் வழங்கினார்கள்.
வருகைப்பதிவு
தொடர்ந்து இதுபோன்ற நிலை வந்ததால் பொதுப்பட்டியல் என்ற பிரிவு தொடங்கப்பட்டு, வட்டார வளமைய கல்வி அதிகாரிகளே எமிஸ் எண்களை ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்று பொதுப்பிரிவில் வைத்தனர். இதனால் அந்த பிரச்சினை சீரமைக்கப்பட்டது. இதில் இருந்து ஆசிரிய-ஆசிரியைகள் விடுபட்ட நேரத்தில், ஆசிரிய-ஆசிரியைகள் தினமும் பள்ளிக்கூடத்துக்கு வந்ததும் தங்களுக்கு என்று வழங்கப்படும் எமிஸ் கணக்கு எண்ணில் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவு வந்தது.
மாணவர்கள் வருகை
ஆசிரியர்களுக்குதான் இந்த நிலை என்றால், அடுத்து கல்வித்துறை அதிகாரிகள் மேலும் ஒரு உத்தரவை வழங்கினார்கள். அதில், ஆசிரிய-ஆசிரியைகள் தங்கள் வருகைப்பதிவினை பதிவேற்றம் செய்ததும், வகுப்பறையில் உள்ள மாணவ-மாணவிகளின் பதிவை அவரவர் எமிஸ் கணக்கு எண்ணில் வருகைப்பதிவு செய்ய வேண்டும். ஒரு வகுப்பறையில் சராசரியாக 10 மாணவர்கள் என்றால் சுமார் ஒரு மணி நேரம் இதற்கு ஆகிறது.
அதிகமாக மாணவர்கள் இருந்தால் மதியம் வரை ஆசிரியருக்கு வேறு வேலை இருக்காது. இதற்கிடையே கல்வி தொலைக்காட்சி பார்க்க வைக்க வேண்டும். கல்வி தொடர்பான வீடியோக்கள் போட்டு காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவுகளும் உண்டு.
உணவு விவரங்கள்
சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது கல்வித்துறையில் நியாயமான பணிகள் மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று ஆசிரிய-ஆசிரியைகள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த ஆட்சியை விட தற்போது கல்வித்துறையில் தினசரி ஒரு உத்தரவு என்று ஆசிரியர்கள் விரக்தியின் உச்சத்துக்கு சென்று உள்ளனர்.
அதில் புதிதாக ஒரு உத்தரவு, தினமும் மாணவ-மாணவிகளின் வருகைப்பதிவை எமிஸ் மூலம் செய்தால் மட்டும் போதாது. முந்தைய நாள் இரவு அந்த மாணவர்-மாணவி என்ன சாப்பிட்டார் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். அதற்கு வேறு வழி இல்லாமல் ஆசிரியர்கள் பணி செய்ய நினைத்தாலும், இணையதளம் ஒத்துழைக்காது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பதிவேற்றம் செய்யாவிட்டால் உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து வரிசையாக கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
கல்வித்தரம் குறைகிறது
அரசு செய்யும் நடவடிக்கைகள் மாணவர் நலன் சார்ந்ததுதான். ஆனால், இந்த பணிகளுக்கு என்று ஆசிரியர்கள் அல்லாமல் தனியாக பணியாளர்களை நியமித்து, உரிய தொழில் நுட்ப உபகரணங்களையும் வழங்கி செய்ய வேண்டும்.
இல்லை என்றால் செல்போனில் பணி செய்யவே நேரம் போதாது. எப்படி பாடம் எடுக்க முடியும். பாடம் கற்பித்தல் தவிர மற்ற பணிகளை ஆசிரியர்கள் வசம் கொடுத்து விட்டு, மாணவர்களின் கல்வி தரம் இல்லை என்று ஆசிரியர்களை குறை கூறுவதோ, தண்டனை அளிப்பதோ சரியாக இருக்காது. கொரோனா நேரத்தில் செல்போனில் பாடம் எடுங்கள் என்று கட்டாயப்படுத்தினார்கள். இப்போது பாடம் எடுப்பது தவிர மற்ற அனைத்தையும் செல்போனில் செய்ய கூறுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.