தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், சுபகாரியங்களுக்கு கூட தங்கம் வாங்க முடியவில்லை-பெங்களூரு பெண்கள் கருத்து
தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், சுபகாரியங்களுக்கு கூட தங்கம் வாங்க முடியவில்லை என பெங்களூரு பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
பெங்களூரு: தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், சுபகாரியங்களுக்கு வட தங்கம் வாங்க முடியவில்லை என பெங்களூரு பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
தங்கம் விலை உயர்வு
தங்கத்தின் விலை பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது உயர்ந்தும், சரிந்தும் வருகிறது. தற்சமயம் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதன் எதிரொலியாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது. இது நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,238-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.42 ஆயிரத்து 64-க்கும் விற்பனை ஆனது. நாளுக்கு, நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை உயர்வு குறித்து பெங்களூரு பெண் தங்களது கருத்துகளை கூறி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
தலைசுற்றுகிறது
லட்சுமி சங்கரி என்ற பெண் கூறும்போது, ‘தங்கத்தின் விலை நாளுக்கு, நாள் உயர்ந்து வருகிறது. இதனால் இப்போது உள்ள காலத்தில் தங்க நகைகள் வாங்க முடிவது இல்லை. முன்பு எல்லாம் மாதந்தோறும் நகைகள் எடுப்போம். ஆனால் தற்போது நகைக்கடை பக்கம் செல்லவே பயமாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் தங்க நகைகள் வாங்க முடியுமா என்று சந்தேகமாக உள்ளது. தங்கத்தின் விலை குறைந்தால் நன்றாக இருக்கும்’ என்றார்.
சுப்புலட்சுமி என்ற மூதாட்டி கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறுக, சிறுக பணம் சேமித்து தங்கத்தை வாங்கினோம். தற்போது தங்கத்தின் விலையை கேட்டால் தலைசுற்றுகிறது. எனது மகள்களுக்கு கஷ்டப்பட்டு பணம் சேமித்து தங்கத்தை வாங்கினேன். ஆனால் எனது மகள்கள் அவர்களின் குழந்தைகளுக்கு எப்படி தங்கம் வாங்க போகிறார்களோ என்று நினைத்தாலே பயமாக உள்ளது’ என்றார்.
அதிர்ச்சி தருகிறது
தாகுமாரி என்ற பெண் கூறும்போது, ‘தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தற்போதும், வரும் காலங்களிலும் தங்க நகைகள் வாங்க கூட முடியாமல் போகலாம். தங்கம் விலை உயர்வால் சுயகாரியங்களுக்கு கூட தங்க நகை வாங்க முடியாத நெருக்கடியான சூழ்நிலை உருவாகி உள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை குறைந்தால் நன்றாக இருக்கும்’ என்றார்.
ஹன்ஷினி வரதராஜன் என்பவர் கூறும்போது, ‘உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரால் தங்கம் விலை உயர்ந்து உள்ளது. நாளுக்கு, நாள் உயர்ந்து வரும் தங்கம் விலை உயர்வு சற்று அதிர்ச்சியை தருகிறது. உக்ரைன்-ரஷியா போர் நின்றால் தங்கம் விலை குறையும் என்று நினைக்கிறேன்’ என்றார்.
பிரியா ரகுநாதன் என்பவர் கூறும்போது, ‘தங்கம் விலை உயர்வால் தற்சமயம் நகைகள் எதுவும் வாங்க முடியாத நிலை உள்ளது. உக்ரைன்-ரஷியா போர் முடிந்தால் தங்கம் விலை குறைய அதிக வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். எது எப்படியோ தற்சமயம் தங்கம் விலை உயர்வு சற்று அதிர்ச்சி தருகிறது. வரும் நாட்களில் தங்கம் விலை குறைந்தால் நன்றாக இருக்கும்’ என்றார்.
குறைய வாய்ப்பே இல்லை
ஜோதி லட்சுமி என்பவர் கூறுகையில், தங்கம் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் நகைகள் வாங்க முடியுமா? நகைக்கடைக்கு செல்வோமா? என்று சந்தேகம் எழுந்து உள்ளது. நகை விலை உயர்ந்து கொண்டே செல்வதால் சுபகாரியங்களுக்கு கூட பார்த்து, பார்த்து நகை வாங்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டு உள்ளனர் என்று கூறினார்.
பத்மாவதி என்பவர் கூறுகையில், தங்கம் விலை நாளுக்கு, நாள் உயருகிறது. ஆனால் குறைய வாய்ப்பு இருந்த மாதிரி இல்லை. தங்கம் விலை உயரும் போது ஆயிரக்கணக்கில் செல்கிறது. ஆனால் விலை குறையும் போது ரூ.10, ரூ.20 என தான் குறைகிறது. இப்படியே சென்றால் என்ன ஆகும் என்றே தெரியவில்லை என்றார்.
மகாலட்சுமி என்பவர் கூறியதாவது, சுபகாரியங்களுக்கு செல்லும் போது பெண்கள் அதிகளவில் தங்கம் அணிந்து செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டு செல்வதால், கவரிங் நகைகள் வாங்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இனி வரும் காலத்தில் இன்னும் தங்கம் விலை கூடி கொண்டு தான் செல்லும் நிலை உள்ளது. குறைய வாய்ப்பே இல்லை. அப்படி குறைந்தாலும் பெரிய தொகையில் ஒன்றும் குறைய போவது இல்லை என்றார்.