ஈரோடு மாநகராட்சி பகுதியில் குப்பைகளை பொதுவெளியில் கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்; அதிகாரி வேண்டுகோள்
ஈரோடு மாநகராட்சியில் பொது வெளியில் குப்பை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டல சுகாதார அதிகாரி ஜாகிர் உசேன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் பொது வெளியில் குப்பை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டல சுகாதார அதிகாரி ஜாகிர் உசேன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டல சுகாதார அதிகாரி ஜாகிர் உசேன் கூறியதாவது:-
வீடு வீடாக சேகரிப்பு
ஈரோடு ஸ்மார்ட் சிட்டி எனப்படும் பொலிவுறு நகரமாக உள்ளது. இந்த திட்டத்தின் படி குப்பை தொட்டிகள் இல்லாத மாநகரை உருவாக்க வேண்டியது கடமையாகும். இதற்காக பல ஆண்டுகளாக உழைத்து வீடு வீடாக குப்பை சேகரித்து வருகிறோம். தொடக்கத்தில் இந்த திட்டம் சுமையாக இருந்தாலும் இப்போது 90 சதவீதம் மக்கள் குப்பையை முழுமையாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குகிறார்கள். இதனால் இந்த திட்டம் வெற்றி பெற்று வருவதாகவே நம்புகிறோம்.
ஆனால் சிலர் பொதுவெளியில் குப்பை போடுவதை கண்டறிந்து அதை தடுக்கவும், மீறினால் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு மாநகராட்சி மக்களுடன் இணைந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
புகார் தெரிவிக்கலாம்
எனவே பொதுமக்கள் கண்டிப்பாக குப்பைகளை வீதியில் வீச வேண்டாம். உங்கள் வீட்டின் முன்பு மூடியிட்ட குப்பை தொட்டிகளில் குப்பையை பிரித்து வைத்தால் அதை மாநகராட்சி பணியாளர்கள் சேகரித்துக்கொள்வார்கள். அப்படி உங்கள் வீதிக்கு குப்பை சேகரிப்பவர்கள் வரவில்லை என்றால் ஈரோடு மாநகராட்சி புகார் எண் 94890 92000 என்ற எண்ணில் வாட்ஸ்அப் செய்யலாம். 0424 2251616 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
யாரும் குப்பைகளை நீர் நிலைகள், ஓடைகளில் போட வேண்டாம். அப்படி போடுவது கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் வரை கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும். மரக்கிளைகள், இலைகள் உள்ளிட்ட கழிவுகளை சாலையில் போடவோ, எரிக்கவோ வேண்டாம். மேற்கூறப்பட்ட எண்களில் தகவல் தெரிவித்தால், திடக்கழிவு மேலாண்மை பிரிவு தூய்மை பணியாளர்கள் எடுத்துச்சென்று விடுவார்கள். கட்டிடங்கள், தொழில் நிலையங்கள், வீடுகள் புதுப்பிக்கும் போது வெளியிடப்படும் கழிவுகளை சாலை ஓரத்தில் அல்லது வெளி இடங்களில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும். இதுதொடர்பாக அதிகாரிகளை அணுகினால் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும்.
ஈரோடு மாநகராட்சி குப்பை இல்லாத மாநகராட்சி என்ற பெருமையை பெற, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.