வீரவநல்லூர், பத்தமடையில் ஒரே நாள் இரவில் 4 கோவில்களில் திருட்டு
ஒரே நாள் இரவில் 4 கோவில்களில் காணிக்கை பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் தெற்கு பைபாஸ் ரோட்டில் தனியார் நூற்பாலைக்கு அருகில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இக்கோவிலின் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து காணிக்கை பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
இதேபோல் பத்தமடையில் நெல்லை - அம்பை பிரதான சாலையில் உள்ள 3 கோவில்களில் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரேநாள் இரவில் 4 கோவில்களில் திருட்டுபோன சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பாக பேசப்படுகிறது.