திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

குமரி மாவட்ட அளவில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா பரிசுகள் வழங்கினார்.

Update: 2022-03-10 21:16 GMT
நாகர்கோவில், 
குமரி மாவட்ட அளவில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா பரிசுகள் வழங்கினார்.
ஆட்சிமொழி பயிலரங்க கருத்தரங்கு
குமரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து அரசுத்துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்க கருத்தரங்கம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, 1,330 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தாய்மொழி தமிழ்
குமரி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பல்வேறு துறையின் சார்பில் பணிபுரியும் அரசு அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அனைத்து கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் தாய்மொழியான தமிழை கற்பதும், எழுதுவதும் மிக முக்கியத்துவமாக கருத வேண்டும்.
உலக மொழிகளிலேயே மிகப் பழமையானது தமிழ் மொழி ஆகும். கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற அழியா காவியங்களை தந்த பெருமை தமிழுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக திருவள்ளுவர் எழுதிய உலக பொதுநூலான திருக்குறள் தமிழுக்கு பெருமை சேர்க்கிறது. நாம் அனைவரும் இணைந்து தாய்மொழியாகிய தமிழை வளர்த்திட உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாணவ- மாணவிகளுக்கு பரிசு
தொடர்ந்து திருக்குறள் பாடல்கள் அனைத்தையும் ஒப்புவித்த அகஸ்தீஸ்வரம் சரவணந்தேரி அமிர்த வித்யாலயம் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி நிவீதா, மற்றும் மாணவன் அசிதன், குளச்சல் வி.கே.பி.மேல்நிலைப்பள்ளி 11 -ம் வகுப்பு மாணவி நப்ரின் ஹெனா, நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி இளங்கலை பொருளியல் முதலாமாண்டு பயிலும் மாணவி சிவலெட்சுமி, திருவட்டார் எக்செல் குளோபல் பள்ளி மாணவன் ஜான்டேவிட், ராமன்புதூர் சிறுமலர் மகளிர் மேல்நிலைப்பள்ளி 12 -ம் வகுப்பு மாணவிகள் காவ்யா, கவில்மா மற்றும் 10 - ம் வகுப்பு மாணவி அனு, தேரூர் ஈசா வித்யா மேல்நிலைப்பள்ளி 7 -ம் வகுப்பு மாணவி சங்கரி, நாகர்கோவில் இந்து கல்லூரி முதுகலை ஆங்கிலம் 2-ம் ஆண்டு மாணவி வைஷ்ணா, நாகர்கோவில் ஹெப்ரான் மேல்நிலைப்பள்ளி 10 -ம் வகுப்பு மாணவி ஜெபிஷா, நாகர்கோவில் செயின்ட் ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி 11 -ம் வகுப்பு மாணவி பிரியதர்சினி, ராமன்புதூர் கார்மல் மேல்நிலைப்பள்ளி 6 -ம் வகுப்பு மாணவன் முருகன் உள்ளிட்ட மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் தமிழ்வளர்ச்சி துணை இயக்குனர் (திருச்சி மாவட்டம்) சிவசாமி, குமரி மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ரெசினாள்மேரி, நாகர்கோவில் இந்து கல்லூரி இணைப்பேராசிரியர் வேணுகுமார், துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்