பக்தர்கள் பூங்கரகம் எடுத்து வழிபாடு
கருமந்துறை காளியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பூங்கரகம் எடுத்து வழிபாடு நடத்தினர்.
பெத்தநாயக்கன்பாளையம், மார்ச்.11-
கருமந்துறையில் உள்ள காளியம்மன் கோவிலில் 34-வது ஆண்டு திருவிழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி காலை 10 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் அபிஷேக பூஜை நடந்தது. மாலை 4 மணிக்கு விளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அய்யாதுரை ஓடையில் வாணவேடிக்கையுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மதியம் 2 மணிக்கு மாவிளக்கு, அலகு குத்துதல், அக்னி கரகம் எடுத்து வருதல் மற்றும் பூ மிதித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து வழிபாடு நடத்தினர். நேற்று இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.